October 18, 2021

News window

News around the world

2 ஆண்டுகளுக்கு பின் தேசிய செயற்குழு கூட்டம் : குஷ்புவுக்கு முக்கிய பதவி| Dinamalar

உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரம், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் கள் என பரபரப்பான சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், முதன்முறையாக பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
பா.ஜ.,வின் அமைப்பு விதிமுறைகளின்படி, அக்கட்சியின் தேசிய செயற்குழு மிகவும் முக்கியமானது. கட்சிக்குள் அமைப்பு ரீதியாக உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான பங்களிப்பையும், முக்கிய முடிவுகளை உறுதி செய்வதற்கும் இந்த குழு முக்கிய பங்காற்றி வருகிறது.

விதிமுறை

கடந்த 2010ல் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய செயற்குழுவை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையாக 33 சதவீத இடஒதுக்கீட்டை மகளிருக்கு தரும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தேசிய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என, அக்கட்சியின் அமைப்பு விதிமுறை கூறுகிறது.ஆனால் அனைவரும் பங்கேற்ற முழு அளவிலான தேசிய செயற்குழு கூட்டம் 2019ல் நடந்தது. அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்படவில்லை.
கொரோனா பரவல் காரணமாக கூட்டம் நடத்தப்படவில்லை என வாய்மொழியாக கூறப்பட்ட போதிலும், மாநில அளவில் செயற்குழு கூட்டங்கள் நடந்தன. சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் நடந்த கூட்டங்களில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, தேசிய தலைவர் நட்டா பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
இருந்தாலும், வலிமை மிக்க தேசிய செயற்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடையே இருந்து வந்தது.

latest tamil news

இந்நிலையில் தான் உ.பி.,யின் லக்கிம்பூரில் விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பா.ஜ., வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற அச்சம், மூத்த தலைவர்கள் மத்தியிலேயே நிலவி வருவதால், முன் எப்போதும் இல்லாத வகையில் கட்சியின் மேலிட வட்டாரங்களில் அசாதாரண சூழ்நிலை எழுந்துள்ளது.இந்நிலையில் தான், அதிரடியாக தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. பெரும்பாலும், வரும் 18 அல்லது அடுத்த மாதம் 7 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் டில்லியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

இதன் முன்னோட்டமாகவே தேசிய செயற்குழு உறுப்பினர்களில், மாற்றி அமைக்கப்பட்ட உறுப்பினர்களின் 80 பேர் அடங்கிய பட்டியலை, பா.ஜ., மேலிடம் நேற்று வெளியிட்டது.மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இன்னமும் அக்குழுவில் நீடிக்கின்றனர். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரகாஷ் ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமைச்சரவைக்குள் இடம் பிடித்த அஸ்வினி வைஷ்ணவ், புதிதாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

நீக்கம்

முதல்வர்கள், துணை முதல்வர்கள், செய்தி தொடர்பாளர்கள், மாநில தலைவர்கள் உட்பட 50 சிறப்பு மற்றும் 179 நிரந்தர அழைப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன.ஏற்கனவே இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் மகேஷ் சர்மா, விஜய் கோயல், தற்போதைய அமைச்சர் ராவ் இந்தர்சித் சிங், அஸ்வினி குமார் சவுபே, பிரகலாத்சிங் படேல் ஆகியோர் இம்முறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வருண் – மேனகா நீக்கம்

பா.ஜ., – எம்.பி., வருண், அவரது தாயும், பா.ஜ., மூத்த தலைவருமான, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா ஆகிய இருவரும் தேசிய செயற்குழு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு
உள்ளனர்.உ.பி., சம்பவம் குறித்து ‘டுவிட்டர்’ வாயிலாக கடும் அதிருப்தியை வருண் தெரிவித்து இருந்தார். இவரது கருத்து பா.ஜ., மேலிடத்தை கோபமடையச் செய்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யிருந்து 10க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். மேலும், பல்வேறு சம்பவங்களில் கட்சி தலைமைக்கு எதிரான கருத்துகளை வருண் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். எனவே தான் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், ராஜ்யசபா எம்.பி., சுப்பிரமணிய சாமியின் பெயரும் தேசிய செயற்குழு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

குஷ்புவுக்கு முக்கிய பதவி

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட, தேசிய மற்றும் மாநில பதவிகளுக்கான பொறுப்பாளர்களை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று
நியமித்தார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். எச்.ராஜா, நடிகை குஷ்பு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
– நமது டில்லி நிருபர் –

Source link

You may have missed