October 20, 2021

News window

News around the world

15 ஆண்டு பழைய வாகன பதிவு புதுப்பித்தலில் அரசு நடவடிக்கை!| Dinamalar

புதுடில்லி :சாலைகளில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயணிப்பதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என, புகார்கள் அதிகளவில் வருகின்றன. இதையடுத்து, 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தை எட்டு மடங்கு உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இதற்கு, சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை தான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

காற்று மாசு அதிகரிப்பு

குறிப்பாக, 15 ஆண்டுகளாகி விட்ட பழைய வாகனங்கள் இயக்கப்படுவதால் தான், காற்று மாசு அதிகரிக்கிறது என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர். அதனால், 15 ஆண்டுகளான பழைய வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
டில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, மத்திய நிதியமைச்சகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், ‘2022 ஏப்ரல் 1ம் தேதி முதல், அரசு துறைகளைச் சேர்ந்த வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடி பழையதாக இருந்தால், அவற்றைப் புதுப்பிக்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய அரசாணை

இந்நிலையில், 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதை தடுக்கும் நோக்கில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தற்போது, 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடியிருக்கும் பழைய கார்களின் பதிவுகளை புதுப்பிக்க, 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் எட்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணமும் எட்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுஉள்ளது.இப்போது, 15 ஆண்டுகளான பழைய பஸ், லாரி போன்ற கன ரக வாகனங்களுக்கு தகுதி சான்று கட்டணம் 1,500 ரூபாயாக உள்ளது. இது, 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அபராதம்

சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பயணியர் வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகள் பழைய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கு பதிவு புதுப்பிப்பு கட்டணம், 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு, பதிவு புதுப்பிப்பு கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், பதிவு புதுப்பிப்பை தாமதப்படுத்தினால், மாதம் ஒன்றுக்கு 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.அதேபோல், பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் காலாவதியாகி இருந்தால், அன்றைய தினத்தில் இருந்து தினமும் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வுகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

லாரி தொழிலை எப்படி தொடர்வது?

மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் முழுமையாக மீண்டு வரவில்லை. முடங்கிய தொழில்கள் சிறிது சிறிதாகத் தான் பழைய நிலைக்கு திரும்பும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மற்ற துறைகளை விட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து துறை தான். லாரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். லாரிக்கு கட்ட வேண்டிய கடன், வட்டியை செலுத்த முடியாமல் சிலர் இறந்து விட்டனர். பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டன.

தற்போது, 15 ஆண்டுகள் கடந்த லாரிகளின் பதிவை புதுப்பிக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணத்தை, 1,500 ரூபாயில் இருந்து, 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில் 4.65 லட்சம் கன ரக வாகனங்கள் உள்ளன. அதில், 1.65 லட்சம் வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்தவை. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, ‘மாமூல்’ உயர்வு என இருக்கும் போது, பதிவு புதுப்பித்தல் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தினால், லாரி தொழிலை எப்படி தொடர்வது என புரியவில்லை. லாரி உரிமையாளர்கள் சங்கங்களை கூட்டி விவாதித்து, இந்த உத்தரவை எப்படி எதிர்கொள்வது என கலந்து பேசி, முடிவு எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link