November 28, 2021

News window

News around the world

விரைவில் நிவாரணம் அறிவிக்குது அரசு| Dinamalar

சென்னை :”தமிழகத்தில் 1.45 லட்சம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. விவசாயிகளுக்கான நிவாரணத்தை, முதல்வர் விரைவில் அறிவிப்பார்,” என வேளாண் துறை
அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததுமே தன் ஆட்டத்தை துவக்கி விட்டது. பருவமழை துவங்கும் முன், அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்; துரித நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.

latest tamil news

வேளாண் துறையில் மாவட்டந்தோறும் அதிகாரிகளிடம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே பேசினோம். தினமும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்த விபரங்களை அனுப்ப உத்தரவிட்டோம்.தமிழகத்தில் 44 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 1.45 லட்சம் ஏக்கர் பயிர், மழை நீரில் மூழ்கி உள்ளது. கணக்கெடுப்பின் போது முழுமையான விபரம் தெரியும்.மாநிலம் முழுதும், 31.76 லட்சம் ஏக்கரில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 6,000 ஏக்கர் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு, தண்ணீர் வடியும் போது தெரியும்.

பயிர் சேதங்களை கணக்கிட, அமைச்சர்கள் குழுவை முதல்வர் நியமித்துள்ளார். இக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, சேத விபரங்கள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் வழங்கும்; விரைவில் நிவாரணத்தை முதல்வர் அறிவிப்பார்.
மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் நடமாடும் காய்கறி கடைகள் வழியே, காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர் காப்பீடு திட்டத்தில், 8.08 லட்சம் விவசாயிகள் தங்களை இணைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 1.44 லட்சம் விவசாயிகள் கூடுதலாக பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்ய, 15ம் தேதி கடைசி நாள். இதை நீட்டிக்கும்படி மத்திய அரசிடம்
கேட்டுள்ளோம்.முதல்வர் அமைத்த குழுவினர், டெல்டா மாவட்ட சேதங்களை பார்வையிடுவர்; மற்ற மாவட்டங்களில் அதிகாரிகள் கணக்கெடுப்பர். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அமைச்சர்கள் குழு அமைப்பு

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளிக்க, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.குழுவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வசதியாக, முதல்வருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Source link