October 18, 2021

News window

News around the world

லடாக் பகுதியில் தயார் நிலையில் விமானப் படை பெருமிதம்! தலைமை தளபதி விவேக் ராம் சவுத்ரி தகவல்

ஹிண்டன்: ”கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு சீன அத்துமீறி நடத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட உடனiடி நடவடிக்கை, விமானப்படையின் தயார் நிலையை நிரூபித்தது,” என, விமானப்படை தலைமை தளபதி விவேக் ராம் சவுத்ரி கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படையின் 89ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விமானப்படை வீரர்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியதாவது:எதிரி நாடுகளின் எந்த சவாலையும், மிரட்டலையும் எதிர்கொள்ள விமானப்படை எப்போதும் தயாராக உள்ளது.

தாக்குதல்

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை, விமானப்படையின் தயார் நிலையை உலகுக்கு உணர்த்தியது.விமானப்படையில் புதிதாக சேரும் வீரர்களும், வீராங்கனையரும் திறமை மிக்கவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மூத்த அதிகாரிகள், இளம் அதிகாரிகளின் திறமையை ஊக்குவிக்க தங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும். மற்ற இரு படைகளுடன் இணைந்து பணியாற்றுவதில் விமானப்படை மிகவும் ஆர்வமாக
உள்ளது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியம் என்ற பேச்சுக்கே இடமிருக்க கூடாது என்பதில், விமானப்படை உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முப்படை

நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய – சீன வீரர்கள் மோதல்

திபெத் வழியாக நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் கடந்த வாரம் சீன வீரர்கள் நுழைந்துள்ளனர். அங்கு இருந்த சோதனைச்சாவடிகளை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையறிந்த இந்திய வீரர்கள் விரைந்து வந்து, சீன வீரர்களை தடுத்தனர். இதையடுத்து இந்திய – சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் தங்கள் எல்லைக்குள் திரும்பினர்.எனினும் அத்துமீறிய சீன வீரர்கள் சிலரை இந்திய வீரர்கள் சிறைப்பிடித்தனர். இதனை தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் அளவில் சமாதானப்பேச்சு நடந்தது. இதன்பின் சீன வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 பிரிவுகளுக்கு பட்டயம்

கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம் கடந்த ஆண்டு அத்துமீறிய போது, இந்திய ராணுவத்தின் வலிமையை சிறப்பாக வெளிப்படுத்திய விமானப்படையின் மூன்று பிரிவுகளுக்கு பட்டயம் வழங்கி, விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி நேற்று கவுரவித்தார்.
விமானப்படையின், ‘மிக் 29’ போர்விமானப் பிரிவு, ‘116 ஹெலிகாப்டர்’ பிரிவு, தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணை பிரிவு ஆகியவற்றுக்கு பட்டயம் வழங்கப்பட்டது.

Advertisement

Source link