December 9, 2021

News window

News around the world

ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் – 16 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் | Thirunageswaram Naganathasamy Temple Kumbabhishekam after 16 years

செய்திகள்

ஒய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021, 17:44 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

தஞ்சாவூர்: ராகு தோஷம் போகும் திருத்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாக சாலை பூஜைகள் சிறப்பாக தொடங்கியுள்ளன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோயில் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னிதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு. இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு

இக்கோயிலின் 2வது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். திருமண தடை, இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.

கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள். அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர்.

இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் நாமம் பிறையணிஅம்மன். மகாசிவராத்திரி அன்று ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் தினமும் சிவ தரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு

பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் முழுவதும் ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு குடமுழுக்குக்கு தயார் நிலையில் உள்ளது.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு

வருகிற 24ஆம் தேதி ஞாயிறுக்கிழமை காலை குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை கடங்கள் புறப்பாடு நடைபெற்று யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

24ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு 6ஆம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 7 மணிக்கு அனைத்து பரிவார விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடைபெற உள்ளது.

காலை 9 மணிக்கு பிரதான தெய்வங்களுக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடக்கிறது 10.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு கோவில் குடமுழுக்கும், தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண மகோற்சவமும், பஞ்சமூர்த்திகள் தீபாராதனையும் நடக்கிறது.

ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம். கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.

ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும்

ஆங்கில சுருக்கம்

ராகு தோஷத்தின் திருத்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாக சலாய் பூஜைகள் நன்றாகத் தொடங்கியுள்ளன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கதை முதலில் வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021, 17:44 [IST]

Source by [author_name]