October 20, 2021

News window

News around the world

ராகுல் மீது வழக்கு பாயுமா? டுவிட்டருக்கு நோட்டீஸ்!| Dinamalar

புதுடில்லி:டில்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை, ‘டுவிட்டரில்’ பகிர்ந்ததற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது வழக்கு பதிய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

சமூக வலைதளம்

டில்லியில், ஜூலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அந்த சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தை, ராகுல் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

”போக்சோ’ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்த சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ குற்றம். இது தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, ராகுல் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது.

இந்நிலையில், மகரந்த் சுரேஷ் மத்லேகர் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை டுவிட்டரில் ராகுல் பகிர்ந்தது, போக்சோ சட்டம் மற்றும் சிறுவர்களுக்கான நீதிச் சட்டம் ஆகியவற்றை மீறிய செயல். இந்த சம்பவத்தை அரசியல் லாபத்துக்காக ராகுல் பயன்படுத்தி உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

விசாரணை

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

முன்னதாக டுவிட்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘ராகுல் பதிவிட்ட கருத்தும், புகைப்படமும் டுவிட்டர் நிறுவனத்தின் விதிகளை மீறியவை. அதனால் அவை நீக்கப்பட்டு விட்டன. ராகுலின் கணக்கும், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது’ என்றார்.இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement

Source link