October 20, 2021

News window

News around the world

மோடி ஆட்சியில் விரைவான மாற்றம் கண்டுள்ள இந்திய பொருளாதாரம்| Dinamalar

இந்திய பொருளாதாரம் அதி விரைவான மாற்றங்களை கண்டுள்ளது. 1991-ம் ஆண்டிலேயே, நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட போதும், அவசியமான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், தாராளமயமாக்கம் வாயிலாக, பொருளாதாரத்தில் நாம் எதிர் நோக்கியிருந்த மாற்றங்கள் நிகழவில்லை. முயற்சிகளின் பலன் நீர்த்துப் போயின. 10 ஆண்டுகளுக்கு பின் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால், உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக, குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், 10 ஆண்டுகளாக பின்பற்றப்படவில்லை. இது, நமக்கு மோசமான பின்னடைவை ஏற்படுத்தின; மோசமான பொருளாதாரம் உடைய ஐந்து நாடுகளில் ஒன்றாக நாம் வரையறுக்கப்பட்டோம். இதன்பின், 2014-ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது, தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த அனுபவத்துடன், பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, புதிய இந்தியாவை கட்டமைக்க உறுதி பூண்டார்.

புதிய இந்தியாவில், ஒவ்வொரு தனி நபரின் அடிப்படை தேவைகளான நீர், துாய்மையான சுற்றுப்புறம், குடியிருப்பு, சுகாதாரம் போன்றவை வழங்கப்படும். மக்களை மேம்படுத்துவதற்காக, புதிய இந்தியாவின் கொள்கைகள் செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டும், வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பற்றாக்குறையின் மிக மோசமான சுழற்சியை, உரிமை அடிப்படையிலான கொள்கைகளால் உடைக்க முடியவில்லை.வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகள் கிடைக்கப் பெறாததால், பழைய இந்தியாவில் நம் பாரம்பரியத் திறன், கைவினை கலைத்திறன் ஆகியவை மிகப்பெரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தன. கணிக்க முடியாத பருவநிலைகளை எதிர்கொண்டு, அதிக அளவில் நம் விவசாயிகள், விளைபொருட்களை விளைவித்த போதிலும், கட்டுப்பாடுகள் காரணமாக, அவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை.

latest tamil news

அனைத்தையும் அரசே செய்ய வேண்டும்; அதே சமயம் சிறப்பாக செயல்படவும் வேண்டும் என்ற அதீத நம்பிக்கை, சோஷலிச இந்தியாவில் இருந்தது. உருக்கு, சிமென்ட், கடிகாரங்கள், தொலைபேசிகள், டயர்கள், ஆடைகள், மருந்து பொருட்கள், ஆணுறைகள், ஸ்கூட்டர்கள், கார்கள், கப்பல்கள் மட்டுமின்றி, ரொட்டிகள் கூட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்டன.

வங்கி, காப்பீடு, சுத்திகரிப்பு, சுரங்கம், ஹோட்டல்கள், உபசரிப்பு, சுற்றுலா செயல்பாடுகள், விமான சேவைகள், தொலைபேசி தொடர்புகள் ஆகியவற்றிலும் அரசின் தொடர்பு இருந்தது.தனியார் துறையினரிடம் திறமையை ஏற்படுத்தும் வகையில், இந்த முறையில் இருந்து விலகி, புதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமானது.பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சி காலத்தில் ஏராளமான சீர்திருத்தங்கள், புத்துயிரூட்டுதல் மற்றும் மீட்சிக்கான நடவடிக்கைகள் முழு அளவில் தொடங்கின.மக்கள் நிதி திட்டம், ஆதாரை வலுப்படுத்துதல், மொபைல்களை பயன்படுத்துதல் என்ற மும்முனை இணைப்பு நடவடிக்கையை துவங்கியது, ஏழைகளுக்கு பலன் தந்தது. இதனை தொடர்ந்து, உடனடியாக நேரடி மானிய திட்டம் வாயிலாக, ஓய்வூதியம், ரேஷன், எரிபொருள், நல நிதி ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாக, நாடு தழுவிய அளவில் பல முறை வசூலிக்கப்படும் மறைமுக வரிகள், ஒன்றாக கொண்டு வரப்பட்டன. திவாலாகுதல் நடவடிக்கைகளுக்கு உரிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்கான, மிகப்பெரும் நடவடிக்கையாக திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் அமலாகின. தொடர்ச்சியாக இருந்த வாராக் கடன்கள் பிரச்னைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டது. இன்று பெரும்பாலும், அனைத்து வங்கிகளுமே அந்தந்த தருணத்தில் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் இருந்து மீண்டுள்ளன. அவற்றுக்கு மறு மூலதனம் அவ்வப்போது தகுந்த பருவ அடிப்படையில் வழங்கப்பட்டது.தற்போது வங்கிகள், சந்தையிலும் நிதியை திரட்டுகின்றன.பெருந்தொற்றுக்கு மத்தியிலும், பொருளாதாரத்தை சிறப்பாக பராமரிக்கும் நடவடிக்கைகள், மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்திலும் தொடர்கின்றன.
பெருந்தொற்று காலத்தில், யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, 80 கோடி மக்களுக்கு எட்டு மாதத்திற்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், மூன்று சிலிண்டர்கள் வரை சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்பட்டது.

எதிர்பாராத செலவுகளை சமாளிக்க, சிறிதளவு பணமும் தரப்பட்டது. நான்கு முறை அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்டங்களானது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வணிகர்கள், சிறு பணியாளர்களுக்கு காலத்துக்கு ஏற்ற ஆதரவுக்கரமாக அமைந்தன.அத்துடன், ஏராளமான அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டுக்கு பிறகு, தொழில் வரி விகிதம் குறைக்கப்பட்டது. விவசாயிகளை மேம்படுத்துவதற்காக, மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது, தங்களது விளைபொருட்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதையும், அதன் விலையையும் விவசாயிகளே தீர்மானிக்க முடியும்.

பெருந்தொற்று காலத்திலும், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டன. 2017-ல், 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில், தற்போது, 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே உள்ளன. தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் மறுகட்டமைப்பு நிறுவனம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

இந்த நிறுவனங்கள், வர்த்தக வங்கிகளின் வாராக்கடன்களை வசூலிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.அவை சொத்துக்களின் வாயிலாக, வங்கிகளுக்கு அதிகபட்ச மதிப்பு கிடைக்கச் செய்யும். 112 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான ஒட்டுமொத்த மூலதன செலவினங்களுடன் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் முன்னேற்றங்கள் குறித்த தகவல்கள் வலைதளத்தில் உள்ளன.

முதலீடுகளை மேலும் ஈர்க்கவும், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றவும், 13 முதன்மை துறைகள் பயனடையும் வகையில், உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த, தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.நடப்பு, 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த கொள்கை இடம் பெற்றது. இதில், அடையாளம் காணப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மட்டுமே, குறைந்த அளவில் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு இணையாக, அனைத்து துறைகளிலும், தற்போது தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு துறையில் தானியங்கி முறையில், 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களிடம் தொடக்க நிலை நிதி திரட்டும் நடவடிக்கையில், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஈடுபட்டுள்ளது.

வைப்புத்தொகை காப்பீட்டு கடன் உத்தரவாத சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வாயிலாக, சிறு அளவிலான சேமிப்புதாரர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வசதி கிடைக்கிறது. இந்த நடவடிக்கை வாயிலாக, வங்கிகளுக்கு ஏதாவது நெருக்கடி ஏற்பட்டாலும், 98.3 சதவீத வைப்பு தொகைகளுக்கு காப்பீடு கிடைக்கும்.ட்ரோன் தொழில்நுட்பம் வாயிலாக, நில வரைபடங்களை தயாரித்து, கிராமங்களில் உள்ள நிலம் அல்லது வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஆவணங்களை வழங்க, ‘ஸ்வமித்வா’ திட்டம் வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் வாயிலாக, உரிய கடன் கிடைக்காமல் வறுமையிலிருந்து மீண்டு வர முடியாமல், தவித்து வந்த நிலை மாறியுள்ளது.மற்ற மூன்று திட்டங்களான, ‘ஸ்வநிதி, முத்ரா, ஸ்டேண்ட் அப்’ ஆகியவை, சிறு நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்க வழிவகை செய்கின்றன. இது, ஏழை மக்களுக்கு கவுரவத்துடன் வாழ்வதற்கான வழிவகையை செய்துள்ளது. தன் மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் தலைமை மற்றும் அனைவருக்கும் ஆதரவு அளிப்பது என்ற அதன் கொள்கை வாயிலாக, இதைவிட ஏராளமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
நிர்மலா சீதாராமன்மத்திய நிதி மற்றும்நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர்

Source link