November 28, 2021

News window

News around the world

முதல்வர் ஸ்டாலின் நான்காவது நாளாக ஆய்வு| Dinamalar

சென்னை:சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்களை, நான்காவது நாளாக நேற்றும், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

முன்னதாக, சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். அங்கிருந்த வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி மற்றும் அதிகாரிகள், முதல்வரிடம் மையத்தின் செயல்பாடுகளை விளக்கினர்.கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக, பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை கேட்டறிந்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முதல்வர் அங்கிருந்த போது, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகிலா என்ற பெண், அவர் வசிக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் பேசிய முதல்வர், ‘தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.பின், அங்கிருந்து தியாகராய நகர் சென்றார். அங்கு விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில், பொக்லைன் உதவியுடன், கழிவு நீர் அகற்றும் பணி நடப்பதை பார்வையிட்டார்.

ஜி.என்.செட்டி சாலையில், சத்தியமூர்த்தி பள்ளி வளாகம், விஸ்வநாதபுரம், ரங்கராஜபுரத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நீர் அகற்றும் பணியை ஆய்வு செய்தார். நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் உட்புறத்தில், மாம்பலம் கால்வாய், அடையாற்றில் கலக்கும் இடத்தில், வெள்ள நீர் செல்வதை பார்வையிட்டார். முதல்வருடன், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

‘மத்திய அரசிடம்நிதி கேட்போம்’

சென்னை தியாகராய நகரில், மழை நீர் தேங்கிய பகுதிகளில், நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று, அரைகுறையாக பணிகளை செய்திருக்கின்றனர். அதனால் தான், தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது. அதையும் பார்த்து விட்டு, மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும்.

பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு, முதலில் முக்கியத்துவம் கொடுத்து, நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மழை பெய்தால் எங்கெல்லாம் அடைப்பு வரும் என்பதை அறிந்து, சரி செய்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை, 50 முதல் 60 சதவீதம் சரி செய்துள்ளோம். இன்னும் செய்ய வேண்டி உள்ளது. மழைக் காலம் முடிந்ததும், அதையும் செய்து, நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம்.நோய் பரவாமல் இருக்க முகாம்களில் தங்கி உள்ளோருக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து, மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Source link