December 9, 2021

News window

News around the world

மின் வாரியத்தை காப்பாற்றிய ஒருங்கிணைந்த பராமரிப்பு பணி| Dinamalar

சென்னை :கன மழை பெய்து வரும் நிலையிலும், மின் வினியோக சாதனங்களில் சேதம் ஏற்படாமல் இருப்பதற்கு, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியே, முக்கிய காரணமாக உள்ளது.

தமிழக மின் வாரியம், துணை மின் நிலையம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், மின் கம்பி போன்றவற்றின் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது.அவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.சட்டசபை தேர்தலால், மின் தடை ஏற்படக் கூடாது என்பதற்காக, நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து, மின் சாதனங்கள் முழுவீச்சில் பராமரிக்கப்படவில்லை.கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருந்ததால், பராமரிப்பு நடக்கவில்லை.

வழக்கம்

இந்நிலையில், திடீரென கோடை மழை பெய்ததால், அதிக வெப்பத்துடன் இருந்த மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களில் தண்ணீர் பட்டு, பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், அடிக்கடி மின் தடை ஏற்பட்டது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதையடுத்து, ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு திட்டத்தை, மின் வாரியம் ஜூன் 19 முதல் அம்மாதம் இறுதி வரை செயல்படுத்தியது. அதில் மின் சாதனங்களில் படர்ந்தும், அருகிலும் இருந்த 84 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

மேலும், 92 ஆயிரம் சேதமடைந்த கம்பங்கள் சீரமைக்கப்பட்டன; தாழ்வாக சென்ற கம்பியை உயரத்திற்கு இழுத்து கட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஒரு நாள் மழை பெய்தாலே, கம்பம் சாய்ந்து கம்பி அறுந்து விழுந்து, மின் தடை ஏற்படுவது வழக்கம்.

பராமரிப்பு

தற்போது, இம்மாதம் 6ம் தேதி முதல் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், மின் வினியோக சாதனங்களில் சேதம் ஏற்படவில்லை.இதற்கு, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியே முக்கிய காரணம்.இருப்பினும், தண்ணீர் தேங்கிய பகுதிகளில், பாதுகாப்பிற்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Source link