January 29, 2022

News window

News around the world

மார்கழி பாவை நோன்பு – திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் – 7 | Margazhi masam : Tirupavai, Tiruvempavai songs – 7

ஜோதிடம்

ஓய்-ஜெயலட்சுமி சி

புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, டிசம்பர் 22, 2021, 6:24 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

திருப்பாவை – 7

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

மார்கழி மாசம்: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 7

பாடல் விளக்கம்:

ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதிகாலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம்துணையுடன் கீச்… கீச்.. என்று ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம். திருஆய்பாடியில் ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே… தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர்கடைவதை தடுத்து விடுவானே. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும்அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது.

இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும். நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? என்று கூறி எழுப்புகின்றனர். ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே உடனே எழுந்து கதவு திறந்து பாவை நோன்பு நோக்க வாராய் என ஆண்டாள் தன் தோழியரை மட்டுமின்றி எல்லாப் பெண்களையும் அழைக்கிறாள்.

ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள். மந்தரமலையை மத்தாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்ததாலன்றோ அமிர்தம் கிடைத்தது. அதேபோல், தினந்தோறும் இந்தப் பாடலைப் பாடி உள்ளம் என்னும் பாற்கடலில் அவனுடைய திருநாமத்தை உச்சரித்து வந்தால், கடைந்தால் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைப்பது போலவே, அவனுடைய பேரருள் கிடைக்கும் என்பது உறுதி!

திருவெம்பாவை – 7

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கம்

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமுதானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந்தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத்தின் சிறப்புத் தான் என்னென்று கூறுவது என்று பாடுகின்றனர் பெண்கள்.

[ அத்தியாயம் : 1, 2, 3, 4,5,6 ]

ஆங்கில சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள விஷ்ணு மற்றும் சிவன் கோயில்களில் மார்கழி மாதம் டிசம்பர் 22,2021 அன்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தொடங்கியது. இங்கே திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் உள்ளது

Source by [author_name]