December 9, 2021

News window

News around the world

புதுச்சேரி அருகே இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம்…| Dinamalar

சென்னை : ”வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது. அதனால், சென்னை உட்பட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். வரும், 13ல் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதி கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று கரையை கடக்கும் என்றும், அதுவரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று தமிழக கடற்கரை பகுதியை நெருங்கும். தமிழக பகுதியில் படிப்படியாக நகர்ந்து, ஆந்திராவின் தெற்கு பகுதி மற்றும் தமிழக வடக்கு மாவட்டங்களுக்கு இடையில், காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், புதுச்சேரி அருகே இன்று மாலைக்குள் கரையை கடக்கும்.

இந்த மண்டலம் புயலாக மாறாததால், அதன் மையப்பகுதியின் தாக்கம் குறித்த கேள்விகளுக்கு இடமில்லை. எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதிக அளவு சூறாவளி காற்றுக்கும் வாய்ப்பில்லை.காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால், இன்று காலை முதல் பெரும்பாலான மாவட்டங்களில், தரைக்காற்றுடன் கனமழை பெய்யும். சில இடங்களில் 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்யும்.

வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் தரைக்காற்று வீசும். இதனால், மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை சாய வாய்ப்புள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்?

* சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யும். சில இடங்களில் 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்யும்

* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

* கோவை, நீலகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலும்; புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

* நாளை வேலுார், திருப்பத்துார், சேலம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்; தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் நாளை வரை, இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேவைகள் பாதிக்கும்!

வானிலை மைய கணிப்பின் படி, அதிக மழை பெய்தால், பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மின் வினியோகம், தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும். மரங்கள் முறிந்து விழுந்து, சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலுார், நாகை, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னேற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய புயல் சின்னம்

தற்போதைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்த பின், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும், 13ம் தேதி உருவாகும்; அது 15ம் தேதி புயல் சின்னமாக வலுப்பெறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் சின்னமும், தமிழக வடக்கு மாவட்டங்களை நோக்கி வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.-

நாகையில் 31 செ.மீ., கொட்டியது

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, நேற்று முன்தினம் இரவு முதல் டெல்டா மாவட்டங்களை அதி கன மழை புரட்டி போட்டுள்ளது. இதனால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக, நாகை மாவட்டம் திருப்பூண்டியில், 31 செ.மீ., மழை கொட்டியுள்ளது.
காரைக்கால் 29; வேதாரண்யம் 25; திருத்துறைப்பூண்டி 22; பேராவூரணி, திருவாரூர் 19; தஞ்சாவூர், தரங்கம்பாடி 16; பட்டுக்கோட்டை, மதுக்கூர் 15; மன்னார்குடி, மயிலாடுதுறை 14; முத்துப்பேட்டை, நன்னிலம், அதிராம்பட்டினம், பரங்கிப்பேட்டை, சீர்காழி, மஞ்சளாறில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையில்…!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், நேற்று இரவிலும் மிதமான மழை தொடர்ந்தது. நேற்று மாலை 5:30 மணி நிலவரப்படி, எண்ணுாரில், 5; செய்யூர், 4; நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், எம்.ஆர்.சி.நகர், தரமணி, கோட்டூர்புரம் 3; மீனம்பாக்கம், சோழிங்கநல்லுாரில் 2 செ.மீ., மழை பெய்துள்ளது.

Source link