December 8, 2021

News window

News around the world

பட்னவிசுக்கு நவாப் மாலிக் பதிலடி| Dinamalar

மும்பை :”மும்பை தொடர்குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமின் கூட்டாளியுடன், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னவிசுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது,” என, மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டினார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா , தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குமும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமினில்
விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை, என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே விசாரித்து வந்தார். வான்கடே மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக், தினமும் புதிது புதிதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் ‘அமைச்சர் நவாப் மாலிக், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியிடமிருந்து நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார்’ என குற்றஞ்சாட்டினார். இது பற்றி நவாப் மாலிக் கூறுகையில், ‘பட்னவிசுக்கு மாபியா கும்பலுடன் உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் தெரிவித்து, ஹைட்ரஜன் குண்டு போடுவேன்’ என்றார்.

இந்நிலையில், நவாப் மாலிக் நேற்று கூறியதாவது:அப்பாவி மக்கள் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்யும் அதிகாரிக்கு எதிராகப் போராடுகிறேன். ஆனால், பட்னவிஸ் இந்த பிரச்னையை திசை திருப்ப முயல்வதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரியை பாதுகாக்கவும் முயற்சிக்கிறார். மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் கடந்த 2௦௧௭ல், 14.56 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இம்ரான் ஆலம் ஷேக், ரியாஷ் ஷேக் ஆகியோர் உடனடியாக, ‘ஜாமினில்’ வெளியே வந்தனர். இம்ரான் ஷேக்கை சிறுபான்மை கமிஷன் தலைவராக பட்னவிஸ் நியமித்தார். அடுத்து, கிரிமினல் பின்னணி கொண்ட முன்னா யாதவ் என்பவரை, கட்டுமான வாரியத்தின் தலைவராகவும், ஹைதர் ஆஸான் என்பவரை சிறுபான்மை கமிஷன் உறுப்பினராகவும் பட்னவிஸ் நியமித்தார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி ரியாஸ் பட்டி என்பவருடன், பட்னவிசுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே, என்னுடைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் பற்றி, மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., மூத்த தலைவர் ஆசிஷ் ஷேலார் கூறுகையில், ”ஹைட்ரஜன் குண்டு போடுவேன் என கூறிய நவாப் மாலிக், சிறு பட்டாசைக் கூட வெடிக்க செய்யவில்லை. ”கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் ஷேக், அப்போது காங்கிரசில் இருந்தார். இப்போது, தேசியவாத காங்கிரசில் உள்ளார்,” என்றார்.

Source link