November 28, 2021

News window

News around the world

நெல், கரும்பு ஆதார விலையை உயர்த்த அ.தி.மு.க., கோரிக்கை| Dinamalar

சென்னை:’நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எடுத்து வரும், அனைத்து நெல் மூட்டைகளையும், கொள்முதல் செய்யவும்.’கரும்பு ஆதார விலையை டன்னுக்கு, 4,000 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

அவர்கள் அறிக்கை:அரசு கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நாற்று முளைக்கும் நிலையில் உள்ளன.டெல்டா மாவட்டங்களில் மட்டும், 40 லட்சம் நெல் மூட்டைகள், சாலையில் வைக்கப்பட்டு, அதில் 20 ஆயிரம் மூட்டைகளில், நெல் முளைக்க ஆரம்பித்து விட்டது. இதே நிலைதான் தமிழகம் முழுதும் நிலவுகிறது.

இதற்கு காரணம், நேரடி கொள்முதல் நிலையங்களில், ஒரு நாளைக்கு 700 முதல் 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதுதான்.தேவையான கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்தால் இந்த சிக்கல் தீரும்.ஆட்சிக்கு வந்தால், நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாய்; 1 டன் கரும்புக்கு ஆதார விலை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வாய்மூடி மவுனம் காக்கும் அரசாக, தி.மு.க., அரசு உள்ளது.

விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல், கரும்புக்கு ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அப்பகுதிகளில் ஆய்வு செய்து, அவர்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் எடுத்து வரும் அனைத்து நெல் மூட்டைகளையும், உடனுக்குடன் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.இல்லையேல், அரசனின் கொடுமை தாங்காமல், மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக அமைந்து விடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link