November 28, 2021

News window

News around the world

சென்னை அருகே கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு| Dinamalar

சென்னை :வங்கக்கடலில் நவம்பர் 9ல் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை சென்னையில் கரையைக் கடந்தது. 40 மணி நேரத்துக்கும் மேலாக விடாமல் கொட்டித் தீர்த்த மழையால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. கடந்த 6ம் தேதி இரவு முதல் பெய்து வரும் மழை இன்று ஓய்ந்து, வெள்ளப் பாதிப்பு குறையுமா என்ற
எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 25ல் துவங்கியது. முதலில் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் மழை பெய்தது. பின், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவுக்கும் மழை பரவியது. முதலில் குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இது, அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்த நிலையில், அதையொட்டிய பகுதியில் இருந்து, ஆந்திரா வரையிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.இதன் தாக்கத்தால், தென் மாவட்டங்கள் முதல், வட மாவட்டங்கள் வரை நாலாபுறமும் பரவலாக மழை பெய்தது. தீபாவளி கொண்டாடப்பட்ட 4ம் தேதியன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. தலைநகர் சென்னையில், 6ம் தேதி இரவில் துவங்கி, விடிய விடிய மழை கொட்டியதில், ஒரே நாளில் 23 செ.மீ., மழையளவு பதிவானது.

வெள்ளப்பெருக்கு

அதனால், சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் கூட வெள்ளத்தில் சிக்கியது. கோயம்பேடு, கொரட்டூர், பெரம்பூர், புரசைவாக்கம், சூளை, வியாசர்பாடி, மாதவரம் என பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.நவம்பர் 9ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த மண்டலம் நேற்று கடலுார் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. பின், காற்றின் வேக மாற்றத்தால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசைமாறி, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் சென்னை மைய இயக்குனர் புவியரசன் அறிவித்தனர்.

பாதை மாறியது

அதன்பிறகும் பாதை மாறியதால், சென்னையில் கரையை கடக்கும் என்று நேற்று காலையில் அறிவிக்கப்பட்டது. அதேபோன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 5:00 மணிக்கு சென்னையில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 60 கி.மீ., வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள், கிளைகள் முறிந்து விழுந்தன. சில பகுதிகளில் குடிசை வீடுகள் காற்றில் சேதமடைந்தன. பல பகுதிகளில் கரையை கடக்கும் முன்னரும், சில பகுதிகளில் கரையை கடந்த பிறகும் மிதமான மழை பெய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக வேலுார் வரை சென்று, இன்று காலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்; தாழ்வு மண்டலம் செல்லும் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடைமழை ஓயுமா?

வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 9ம் தேதி இரவில் துவங்கிய மழை, நேற்று பிற்பகல் வரையிலும், விடாமல் 40 மணி நேரம் கொட்டியது. சூரிய வெளிச்சம் தெரியாத அளவுக்கு, கடந்த இரண்டு நாட்களாக வானம் இருண்டு அடைமழை பெய்ததால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல இடங்களில் மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

எனவே, மாநிலம் முழுதும் 6ம் தேதி துவங்கிய மழை, தற்காலிகமாக இன்று ஓயுமா என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதைத் தொடர்ந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்து, இயல்பு வாழ்க்கையை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒன்றரை மணி நேர நுழைவு

காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக் கடலில் இருந்து நிலப்பரப்புக்குள் நுழையும் நிகழ்வு, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை நிகழ்ந்தது. மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்தது. அப்போது, கடற்பகுதியில் இருந்து நிலத்திற்குள் பலத்த காற்று வீசியது. சில நேரங்களில் 60 கி.மீ., வேகம் வரையிலும் காற்று வீசியதாக வானிலை மைய ஆய்வில் பதிவாகியுள்ளது.சென்னையில் எண்ணுார் துவங்கி, திருவொற்றியூர், துறைமுகம், மெரினா, பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம் என, அனைத்து கடற்கரை பகுதியையும் சூழ்ந்தவாறு தாழ்வு மண்டலம் கரைக்குள் நுழைந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

விமானம் தரையிறங்குவது 6 மணி நேரம் நிறுத்தம்

சென்னையில் இரண்டு நாட்களாக அதி கனமழை பெய்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல், சென்னை விமான நிலைய பகுதியில், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால், சென்னையில் தரையிறங்க வந்த உள்நாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று இரவு 7:00 மணி வரை, அந்தமான், கொச்சி, மும்பை, கோவை, ஐதராபாத், மதுரை, பெங்களூரு, மைசூரு, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய, 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.மேலும், நேற்று பகல் 1:15 முதல் மாலை 6:00 மணி வரை, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், சென்னையில் இருந்து வழக்கம் போல் விமானங்கள் புறப்பட்டு சென்றன.மாலை 5:00 மணிக்கு மேல், சென்னைக்கான, ‘ரெட் அலெர்ட்’ நீக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு மேல், சென்னையில் விமானங்கள் தரையிறங்க துவங்கின.

Source link