December 9, 2021

News window

News around the world

சிலம்பரசனின் ‘மாநாடு’ வெளியீடு: தமிழக அரசின் தடுப்பூசி கட்டாயம் அறிவிப்பால் வசூல் பாதிக்கப்படுமா? | Will new rule on vaccine certificated in theater affect Maanadu movie?

Art Culture

bbc-BBC Tamil

By BBC News தமிழ்

|

பொது இடங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் எனவும் அதற்கான சான்றிழ்கள் இருந்தால் மட்டுமே பொதுஇடங்களுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ‘மாநாடு’, ‘ராஜவம்சம்’ உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு திரைத்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அரசின் இந்த திடீர் அறிவிப்பிற்கு என்ன காரணம் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்,

‘மக்கள் நலனே பிரதானம்’

“கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அப்படி இருக்கும்போது, இனிமேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையாகதான் இதை பார்க்க வேண்டும். அப்படி இருக்கும்போது அரசின் இந்த முடிவு எப்படி தனி மனித உரிமையில் தலையிடுவது என்று கூற முடியும்? நீதிமன்றமும் இதை தான் அறிவுறுத்துகிறது.

அரசு எதுவுமே தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லையே! மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மட்டுமே இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்ல, பள்ளிகள் திறப்பது, முல்லை- பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட எந்த முடிவாக இருந்தாலும் சரி இந்த சர்க்கார் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்புதான் முடிவெடுக்கிறது. ‘Decision By Discussion’ என்றுதான் தற்போதைய அரசு இயங்கி வருகிறது” என்றவரிடம் நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் வெளிவரும் போது வராத அறிவிப்பு சிலம்பரசனின் ‘மாநாடு’ பட வெளியீட்டு சமயத்தில் அறிவித்திருப்பது ஏன் எனவும் இந்த முடிவு படங்களின் வசூலை பாதிக்கும் எனவும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறதே என கேள்வி எழுப்பியபோது,

“ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? தினமும்தான் படம் வெளியாகி கொண்டிருக்கிறது. மக்கள் உயிர் இருந்தால்தானே படங்கள் பார்க்க தியேட்டர் பக்கம் வர முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள திரையரங்குகள் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதுமினி இது நடைமுறையில் இருக்கும். அதனால், இது முழுக்க முழுக்க மக்கள் நலனை மனதில் வைத்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/Cinemainmygenes/status/1462004836300300294

கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் முழுதாக குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதெல்லாம் தவிர்க்க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கதான் வேண்டும். இந்த அறிவிப்பை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சினிமா தரப்பில் வைத்திருக்கிறார்கள். அது பரிசீலிக்க வேண்டுமா இல்லையா என்பதை முதல்வர் முடிவு செய்வார்” என்றார்.

அரசின் அறிவிப்பால் படங்கள் வசூல் பாதிக்கப்படுமா?

கொரோனா இரண்டாம் அலை தீவிரத்திற்கு பிறகு, திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு ‘லாபம்’, ‘டாக்டர்’, ‘அரண்மனை3’, ‘ப்ரண்ட்ஷிப்’, ‘அண்ணாத்த’ என பெரிய பட்ஜெட் முதல் சின்ன பட்ஜெட் வரையிலான பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் முதலில் 50 சதவீதம் இருக்கை வசதிகளுடன் சமூக இடைவெளி, மாஸ்க் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

பின்பு கொரோனா தொற்றின் தீவிரம் சற்றே குறைந்தவுடன் 100 சதவீத பார்வையாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளில் அனுமதி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதில் ஐம்பது சதவீத பார்வையாளர்கள் அனுமதியுடன் வெளியான படங்களில் ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிறகு நூறு சதவீத பார்வையாளர்கள் அனுமதியுடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நடிகர் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’, விஷால், ஆர்யாவின் ‘எனிமி’ உள்ளிட்ட படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இதனையடுத்து தீபாவளிக்கு வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டு பின்பு நடிகர் சிலம்பரசனின் ‘மாநாடு’ திரைப்படம் இந்த மாதம் 25ம் தேதி வெளியீட்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ திரைப்படமும் இந்த மாதம் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் மார்கெட் உள்ளிட்ட பொது இடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு செல்ல கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அதற்கான சான்றிதழ் காட்டினால் மட்டுமே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுமதி எனவும் தமிழக பொது சுகாதரத்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த ‘மாநாடு’ பட தயாரிப்பாளர்

இந்த அறிவிப்பை எதிர்த்து ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர், உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது என்பது இதுதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல் என்று கேள்வி எழுப்பி இருப்பவர். முன்புபோலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த ட்வீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Will new rule on vaccine certificated in theater affect Maanadu movie?

https://twitter.com/sureshkamatchi/status/1462605867069571072

இதுகுறித்து பேசுவதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொடர்பு கொண்டோம், “‘மாநாடு’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ளது. பல தடைகளை கடந்து நீண்ட நாட்கள் கழித்து இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இதுபோன்றதொரு அறிவிப்பு நிச்சயம் நாங்கள் எதிர்பாராதது. பட வெளியீட்டு வேலைகளில் தற்போது உள்ளேன். இது குறித்து மேலும் பேசும் மனநிலையில் இல்லை” என்பதோடு முடித்து கொண்டார்.

https://twitter.com/sekartweets/status/1462684534239993860

இந்த நிலையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, திரையரங்குகளுக்குள் மக்கள் வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு தவணை கொரோனா தடுப்பூசியாவது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டிருக்க வேண்டும். அந்த சான்றிதழ் திரையரங்கிற்குள் நுழையும்போது சரிபார்க்கப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை, டிக்கெட்டுக்கான பணமும் திரும்ப கொடுக்கப்படாது என படங்கள் டிக்கெட் பதிவு செய்யப்படும் ஆன்லைன் தளங்களுக்கான குறிப்பில் பயனர்களுக்கு காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil

English summary

Will new rule on vaccine certificated in theater affect Maanadu movie?

Source link