January 29, 2022

News window

News around the world

சித்தார்த் சர்ச்சை: சாய்னா மீது விமர்சனம் – மகளிர் ஆணையம் தலையீடு | National Commission for Women sent Siddarth a notice over his controversial tweet

Art Culture

bbc-BBC Tamil

By BBC News தமிழ்

|

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாவாலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து ட்வீட் செய்ததாக நடிகர் சித்தார்த் மீது சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய மகளிர் ஆணையம் தலையிடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரமாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்திய பிரதமர் மோதி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.

இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக இந்திய உள்துறை கருதிய வேளையில், சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மாநில அரசு, இந்திய உள்துறை, உச்ச நீதிமன்றம் ஆகியவை தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றன.

National Commission for Women sent Siddarth a notice over his controversial tweet

பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி பிரச்னையை ஆளும் பஞ்சாப் காங்கிரஸுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்த, இது அந்த கட்சி செய்யும் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றி வருகிறது. இந்த விவகாரம் தேச பாதுகாப்பு பிரச்னை என்பதைக் கடந்து அரசியலாக்கப்பட்டு வரும் வேளையில், மோதி பஞ்சாப் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி டிரெண்டாகின. மேலும், #WeStandWithModi என மோதிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

மோதிக்கு குவிந்த ஆதரவு

இந்த வரிசையில், இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பிரதமர் மோதி மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.

https://twitter.com/NSaina/status/1478711667454136320

சாய்னாவின் இந்த ட்வீட்டிற்கு நடிகர் சித்தார்த் தெரிவித்த பதிலில் ஆபாசமாக பொருள் கொள்ளும்படியான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவானது.

https://twitter.com/Actor_Siddharth/status/1478936743780904966

இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தற்போது தலையிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்து நடிகர் சித்தார்த்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவரது ட்விட்டர் கணக்கை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கடிதங்களின் நகல்கள், அந்த ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளன.

https://twitter.com/NCWIndia/status/1480461786339966976

https://twitter.com/NCWIndia/status/1480481751403089922

இந்த பிரச்னை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில் சாய்னா தொடர்பான ட்விட்டர் இடுகைக்கு நடிகர் சித்தார் ட்விட்டர் பக்கத்திலேயே விளக்கமளித்துள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1480449534190702594

அதில், தவறான நோக்கத்தில் தான் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்ததாகவும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த ட்வீட் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் ஆதிலகஷ்மி லோகமூர்த்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்,

“இந்த காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வலைதளங்களை தவிர்த்து விட்டு மனிதன் வாழ முடியாது. மனிதர்களுடைய வாழ்வில் ‘சமூக வலைதளம்’ ஒரு அங்கமாக அனைவரையும் இணைக்கிறது. ஆனால், இந்த சமூக வலைதளம் தற்போது பெரும்பாலும் அவதூறுகளையும் வெறுப்பையும் பரப்புவதற்கும் பயன்படுகிறது என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம். இந்தியாவை பொருத்தவரை சமூக வலைதளங்களில் யார் யாரை திட்டினாலும் அவர்களை நேரடியாக கேள்வி கேட்க சட்டம் இல்லை,” என்கிறார் ஆதிலக்ஷ்மி.

“விளையாட்டு துறையில் இந்தியாவுக்காக விளையாடி சாதித்துள்ள பெண் சாய்னா. இந்தியா ஏற்கெனவே தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்களால் பிரதமர்களை இழந்த கடந்த கால வரலாற்றை அறிவோம். அந்த நோக்கத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் பிரதமரின் பாதுகாப்பு அல்லது கட்சி என எந்த நோக்கத்தில் சாய்னா ட்வீட் செய்திருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து.

இதில் நடிகர் சித்தார்த்துக்கு ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என விருப்பம் இருந்தால் தனியாக போட்டிருந்தால் இவ்வளவு தூரம் பிரச்னை வந்திருக்காது. சாய்னாவின் ட்வீட்டையே எடுத்து அதில் இரட்டை அர்த்தம் புரிந்து கொள்ளும்படியான ஆபாசமான வார்த்தையை பொது வெளியில் பதிவு செய்திருக்கிறார். அதை அவர் தவறான நோக்கத்தில் அல்லாமல் அந்த நேரத்தில் தோன்றிய உணர்ச்சியால் உந்தப்பட்டு கூட போட்டிருக்கலாம். ஆனால், அத்தகைய கருத்து, பொதுவெளியில் தவறாக புரிந்து கொள்ளப்படும் என அவர் யோசித்திருக்க வேண்டும்.

அவரது செயல்பாடு, தனிப்பட்ட முறையில் சாய்னாவை விமர்சித்ததாக மட்டுமின்றி சாதனை பெண்களை காயப்படுத்தும் வகையில் இருப்பது கண்டிக்கத்தக்கதுதான். சாய்னா போன்ற பெண் பிரபலங்களை இப்படி பொது தளங்களில் சர்ச்சையாக பேசும்போது எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் போனால் நாளை சாதாரண பெண்கள் இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது கேள்வி கேட்க முடியாமல் போய்விடும். அதை மனதில் கொண்டே தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதுகிறேன் என்கிறார் ஆதிலக்ஷ்மி.

சமூகவலைதளங்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தவறான கருத்துகளை வெளியிடுவோர் மீது சரியான சட்ட நடவடிக்கையை இந்த அரசு எடுத்தால் மட்டுமே இது போன்ற பிரச்னைகளை வருங்காலத்தில் தவிர்க்க முடியும்,” என்றும் அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

English summary

Siddarth latest tweet about Saina Nehwal. Saina Nehwal tweeted about Prime Minister Narendra Modi’s security breach in Punjab’s Ferozepur

Source link