October 20, 2021

News window

News around the world

ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடாவிடம்…| Dinamalar

புதுடில்லி :நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’வை வாங்கும் ஏலத்தில், ‘டாடா’ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை, டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 61ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்க, அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா மீண்டும் டாடா நிறுவனத்திடம் கைமாறுகிறது.

நம் நாட்டில் கடந்த 1953ல், முதல் விமான போக்குவரத்து நிறுவனத்தை ஜே.ஆர்.டி. டாடா எனப்படும், ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா துவக்கினார். ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது.

கடும் போட்டி

இரண்டாம் உலகப் போருக்குப் பின் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. இதன்பின் ௧௯௫௩ல் ஏர் இந்தியா நிறுவனத்தை, அப்போதைய பிரதமர் நேரு, தேசியமயமாக்கினார்.விமான போக்குவரத்து சேவையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட, 1990களில் மத்திய அரசு அனுமதியளித்தது. ‘மஹாராஜா’ சின்னத்துடன் உலகம் முழுதும் வலம் வந்த ஏர் இந்தியா நிறுவனம், நிர்வாக குளறுபடிகள் மற்றும் தனியாருடன் போட்டி போட முடியாத நிலை ஆகியவற்றால் கடும் நஷ்டத்தை சந்திக்கத் துவங்கியது.இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதில், நாள்தோறும் மத்திய அரசுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முயற்சித்தது. கொரோனா தொற்று காரணமாக, விற்பனை நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் இந்த பணிகளை முடுக்கிவிட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விபரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு, செப்., 15ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் டாடா நிறுவனத்துக்கும், ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

அமைச்சரவை குழு

அந்த நிறுவனம் தாக்கல் செய்த ஏல விபரத்தை, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு ஏற்றுக் கொண்டது.இதன்படி ஏர் இந்தியாவை, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. டிச., இறுதிக்குள் விற்பனைக்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு அடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வரை ஏர் இந்தியாவுக்கு 61 ஆயிரத்து 562 கோடி ரூபாய் கடன் இருந்தது. ஏலம் எடுத்துள்ள 18 ஆயிரம் கோடி ரூபாயில், ஏர் இந்தியாவின் ௧௫ ஆயிரத்து ௩௦௦ கோடி ரூபாய் கடனை டாடா நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது; மீதி தொகையை ரொக்கமாக மத்திய அரசிடம் வழங்க உள்ளது. ஏர் இந்தியாவின் மீதமுள்ள கடன் தொகையை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இதன் வாயிலாக 68 ஆண்டுகளுக்கு பின், ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் செல்கிறது.

ஏர் இந்தியாவை வாங்கியதன் வாயிலாக, நம் நாட்டில் உள்ள 4,400 உள்நாட்டு மற்றும் 1,800 வெளிநாட்டு விமான பார்க்கிங் இடங்கள் டாடா நிறுவனத்திடம் செல்கின்றன. மேலும், வெளிநாடுகளில் உள்ள 900 பார்க்கிங் இடங்களும் டாடா நிறுவனத்துக்கு சென்று விடும்.
எனினும், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ௧௪ ஆயிரத்து ௭௧௮ கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், கட்டடங்கள் டாடா நிறுவனத்துக்கு விற்கப்படவில்லை.

டாடா விமானி ஆன கதை

ஜே.ஆர்.டி.டாடா, 1904 ஜூலை 29ல் பிறந்தார். இவரது தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தை பருவத்தை பிரான்சில் கழித்தார். அப்போது, கோடை விடுமுறையில் பிரான்ஸ் கடற்கரையில் நண்பருடன் நேரம் செலவிடுவது டாடாவின் வழக்கம். இவரது நண்பராக இருந்தவர், 1909ல் உலகில் முதன்முதலாக ஆங்கில கால்வாயை விமானத்தில் கடந்த விமானி லுாயிஸ் பிளரியாட்டின் மகன். இதனால், லுாயிஸ் பிளரியாட் விமானம் இயக்குவதை இருவரும் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. இதைப் பார்த்த ஜே.ஆர்.டி.டாடா, நாமும் விமானி ஆக வேண்டும் என கனவு கண்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப்பின், 1929 பிப்., 10ல் தன் 24 வயதில், ‘வணிக விமான ஓட்டுனர் உரிமம்’ பெற்ற முதல் இந்தியரானார். 1932ல் டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை துவங்கி, இந்தியாவில் விமான சேவைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

‘முத்திரை பதிப்போம்’

ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதை வரவேற்று, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, ‘டுவிட்டரில்’ பதிவிட்டு
உள்ளதாவது:ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் எங்கள் கைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஏர் இந்தியாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விமான போக்குவரத்து சேவையில் டாடா மீண்டும் முத்திரை பதிக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.டாடா நிறுவனம் ஏற்கனவே ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘ஏர் விஸ்தாரா’ என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தையும், ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘ஏர் ஆசியா’ விமான போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதில் மூன்றாவதாக ஏர் இந்தியா இணைகிறது.

எத்தனை விமானம்?

ஏர் இந்தியா நிறுவனம், 58 உள்நாடு, 45 வெளிநாடு என மொத்தம் 103 வழித்தடங்களில் விமான சேவையை இயக்கி வந்தது. 31 நாடுகளில் இதன் விமான சேவை உள்ளது. ஏர்பஸ், போயிங் உட்பட 123 விமானங்கள் உள்ளன. அவை அனைத்தும் டாடா நிறுவனம் வசம் செல்ல உள்ளன.

ரூ.2,700 கோடி வருமானம்!

விமான போக்குவரத்து துறை செயலர் பாண்டே கூறியதாவது:ஏர் இந்தியாவின் ௧௦௦ சதவீத பங்குகளும், ‘ஏர் இந்தியா சாட்ஸ்’ எனப்படும் பயணியர் உடைமைகளை கையாளும் சேவை நிறுவனம் மற்றும் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் ஆகியவற்றின் ௫௦ சதவீத பங்குகளும் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்படும்.ஏர் இந்தியா நிறுவனத்தில் 12ஆயிரத்து 85 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 8,௦௮௪ பேர் நிரந்தர ஊழியர்கள்; 4,001 பேர் ஒப்பந்த ஊழியர்கள். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 1,434 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் வாயிலாக அரசுக்கு 2,700 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதால், முதல் ஆண்டில் ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள். அடுத்த ஆண்டு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா பறந்து வந்த பாதை

1932: இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்தை அறிமுகப்படுத்தியவர் ஜே.ஆர்.டி.டாடா. இவர், டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை துவக்கினார். முதலில் ஆங்கிலேயர்களின் கடித போக்குவரத்து, ‘பார்சல்’களை ஏற்றிச் செல்லும் விமானமாக, கராச்சியில் இருந்து ஆமதாபாத், மும்பை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது.

1935 நவ., 1: முதல் பயணியர் விமானம், மும்பை – திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டது.

1946 ஜூலை 29: இரண்டாம் உலகப்போருக்கு பின், ஏர் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.

1948 அரசு – தனியார் கொள்கையின்படி, 49 சதவீத பங்குகளை மத்திய அரசும், 25 சதவீத பங்குகளை டாடா நிறுவனமும் வைத்திருந்தன; மீதி பொதுமக்கள் கணக்கில் இருந்தது.

1953: விமான சேவை சட்டப்படி பெரும்பாலான பங்குகளை கைப்பற்றி, அப்போதைய பிரதமர் நேரு, ஏர் இந்தியாவை நாட்டுடைமையாக்கினார். இருப்பினும் இதன் தலைவராக ஜே.ஆர்.டி.டாடா 1977 வரை பணியாற்றினார். பின், வெளிநாட்டு விமான சேவை ‘ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடெட்’ என்றும், உள்நாட்டு விமான சேவை ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ என்றும் மாற்றப்பட்டன. 1993 வரை, இந்தியாவின் பெரும்பாலான உள்நாட்டு விமான வழித்தடங்கள் இந்நிறுவனத்திடம் தான் இருந்தன.

1994 – 1995: இந்தியாவில் விமான சேவைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் குறைவான டிக்கெட் விலை உள்ளிட்ட சலுகைகளை வழங்கியதால், ஏர் இந்தியாவுக்கு பயணியர் எண்ணிக்கை குறைந்து, நிறுவனம் வருவாய் இழப்பை சந்திக்கத் துவங்கியது.

2000 – 2001: தனியார்மயமாக்கலை விரிவுபடுத்தும் வகையில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளை விற்க முயற்சித்தது.இதை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடா நிறுவனம் இணைந்து வாங்க முயற்சித்தன. ஆனால், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்களின் போராட்டத்தால், சிங்கப்பூர் நிறுவனம் இதிலிருந்து விலகியதால், இந்த முயற்சி கைவிடப்பட்டது.

2007 – 2008: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதன்பின் ஆண்டுதோறும் ஏர் இந்தியாவின் நஷ்டம் அதிகரித்து வந்தது. 2004 – 2014 காலத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசு, ஏர் இந்தியாவை விற்கும் முயற்சியை எடுக்கவில்லை.

2017 ஜூன்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏர் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களில் இருந்து முதலீடை திரும்ப பெறுவதற்கு அனுமதி வழங்கியது.

2018 மே: மத்திய அரசு, ஏர் இந்தியாவின் 26 சதவீத பங்குகள் வைத்துக் கொண்டு, மீதமுள்ள 74 சதவீத பங்குகளை விற்க, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

2018 மே: ஏலம் கோரி எந்த விண்ணப்பமும் வரவில்லை.

2018 ஜூன்: எரிபொருள் விலை சீராக இருந்ததால், ஏர் இந்தியாவை விற்கும் முயற்சியை மத்திய அரசு தாமதப்படுத்தியது.

2020 ஜனவரி: ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது. ஐந்து முறை கடைசி தேதியை நீட்டித்தும் டிச., 14 வரை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

2021 மார்ச்: விமானத்துறை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி, ‘தனியார்மயமாக்குவது அல்லது நிறுவனத்தை மூடுவதை தவிர வழியில்லை. தினமும் பல கோடி ரூபாய் இழப்பீட்டை சந்திக்கிறோம்’ என்றார்.

2021 ஏப்., : ஏர் இந்தியாவை விற்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டது.

2021 செப்.,: டாடா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தினர் ஏலத்துக்கு விண்ணப்பித்தனர்.

2021 அக்., 8: ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு அறிவித்தது.

Source link