October 20, 2021

News window

News around the world

அன்னிய நிறுவனங்கள் கம்பி நீட்டுவது ஏன்? தொழிலாளர் போர்வையில் சமூக விரோத செயல்!| Dinamalar

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க, தொழில் துறையில் பல திட்டங்கள் போட்டுள்ளனர். அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சியும் எடுக்கப்படுகிறது.

ஆனால், அதற்கு நேர்மாறாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் நடப்பதாக, தொழில் அதிபர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்த சில நாட்களில், சில அன்னிய நாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டன. ஆனால், அந்த நிறுவனங்கள் தற்போது தொழில் துவங்க விரும்பவில்லை. காரணம், இங்கிருக்கும் பல பிரச்னைகள். அவற்றில் மிக முக்கியமானது தொழிலாளர் பிரச்னை.

கூடுதல்சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும், அவர்கள் நிர்வாகத்தை எதிர்ப்பதில் தான் தீவிரமாக உள்ளனர்.சமீப காலமாக, தொழிலாளர்களுக்கு ஆதரவான பல தொழிற்சங்கங்களில், நாட்டுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் புகுந்து விட்டனர். அவர்கள் தொட்டதற்கு எல்லாம் நிர்வாகத்தை எதிர்த்து போராடுகின்றனர். எந்த நேரத்தில், தொழிற்சாலை வாசலில் அமர்ந்து போராடுவர் என புரியாமல் பல நிறுவனங்கள் தவிக்கின்றன.

புதிய வழக்கம்

ஜனநாயக ரீதியில் போராடுவதில் தவறில்லை. ஆனால், தொழிற்சாலையில் நிர்வாக பணியில் இருக்கும் பலரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதும், வீடு வரை சென்று போராடுவதும் புதிய வழக்கமாகி விட்டது.பல தொழிற்சாலைகளில், எச்.ஆர்., எனப்படும், மனிதவள மேலாளர்கள் தாக்கப்படுகின்றனர்.

சென்னைக்கு அருகில் செயல்படும் அமெரிக்க நிறுவனத்தின் மனித வள மேலாளரின் வீட்டுக்கு சென்று, அவரது குழந்தைகள், மனைவியை, தொழிலாளர்கள் போர்வையில் துன்புறுத்தியுள்ளனர். பல மணி நேரம் குடும்பத்தினருக்கு எதிராக கொச்சையாக கோஷம் எழுப்பி உள்ளனர்.இதனால், குடும்பத்தினர் வலியுறுத்தலில், அந்த மேலாளர் பணியை விட்டு செல்ல முடிவெடுத்துள்ளார். இப்படிபட்ட நிலையை பல நிறுவனங்களும் எதிர்கொண்டு வருகின்றன.

‘கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்’ உள்ளிட்டவைகளுக்கு, ‘சர்க்யூட் போர்டு’ என்ற முக்கிய பொருள் தயாரிக்கும், ‘சான்மினா எஸ்.சி.ஐ., பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், ‘யுரிச்சோழா’ என்ற பிரபல அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனம். ஒரகடத்தில் இருக்கும், ‘சிப்காட்’ வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியில் இருக்கும் சாதாரண ஊழியருக்கும், மாத சம்பளமாக, 26 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கொரோனா காலத்திலும் 13 சதவீத சம்பள உயர்வு அளித்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்திலும் தொழிலாளர் பிரச்னை தலைதுாக்கியுள்ளது. மனித வள மேலாளரிடம் தொழிலாளர்கள் பிரச்னை கிளப்ப, தமிழகத்தில் இருந்தே நிறுவனத்தை கிளப்பி விடலாமா என, நிர்வாகம் ஆலோசிக்கிறது.

புறச் சூழல்கள்

‘லாபகரமாக நடத்த முடியவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு சந்தையில் விலை போகவில்லை. அதனால் மூடுகிறோம்’ என, சில வெளிநாட்டு நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு, தொழிற்சாலைகளை மூடுகின்றன. ஆனால், உண்மையான காரணம், தொழில் நஷ்டம் மட்டுமல்ல; தொடர்ச்சியாக நடத்த முடியாத அளவுக்கு இருக்கும் புறச் சூழல்கள் தான். குறிப்பாக, தொழிலாளர் பிரச்னை.இப்படியொரு பிரச்னை, சென்னை மறைமலை நகரில் செயல்படும் அமெரிக்காவின், ‘போர்டு’ நிறுவனத்துக்கும் இருப்பதாக கூறுகின்றனர்.

வேடிக்கை

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்ததும், ஆங்காங்கே அடாவடிக்கு என்றே உருவெடுத்துள்ள சில அரசியல் இயக்கங்களும் பின்புல மாக நிற்க, தொழில் அதிபர்களுக்கு யாரிடம் நியாயம் கேட்டு போவது என தெரியவில்லை. அரசு அதிகாரிகள் சிலரை சந்தித்து முறையிட்டுள்ளனர். ‘பிரச்னையை போலீசுக்கு கொண்டு செல்லுங்கள்’ என, அவர்களுக்கு அறிவுரை கிடைத்திருக்கிறது. இத்தனை போராட்டங்களுக்கும் பின்புலமாக இருந்து ஆதரவுக் கரம் நீட்டுவதும், அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதும் போலீஸ் தான்.

அப்படி இருக்கும் போது, அவர்களிடம் நியாயம் கேட்டு போவதில், எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தான், தொடர்ந்து பிரச்னைகளுடனேயே வாழ முடியாது என முடிவெடுத்து, தொழிற்சாலைகளை மூட நிறுவனங்கள் முடிவு எடுக்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘புரியாதது அல்ல’

சலுகைகள், சம்பள உயர்வு போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தான் தொழிலாளர்கள் போராடுகின்றனர். அவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக இருந்து, வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் பிரச்னைகளை முடித்து வைத்துள்ளனர். மற்றபடி, தொழில் அதிபர்களுக்கு பிரச்னைகள் பெரிய அளவில் இல்லை. அப்படி இருந்து, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால், அரசுநடவடிக்கை எடுக்கும். தொழிலாளர் பின்புலத்தில் தேச விரோதிகள், போராளிகள் உள்ளதாகசித்தரிப்பது, அரசியல்வாதிகள் தான்.
— தொழில் துறை உயர் அதிகாரி

— நமது நிருபர் —

Source link